மரவண்டின் ரீங்காரம்

December 26, 2005

டூரிங் டாக்கீஸ்

Filed under: Uncategorized — மரவண்டு @ 3:41 pm

என்னோட சொந்த ஊரு சிவகாசி பக்கத்துல இருக்குற விளாம்பட்டின்னு ஒரு கிராமம்.இப்போ எங்க ஊர்ல தியேட்டர் எதுவும் கிடையாது ..ஆனா எங்க ஊருல ஒரு பத்துவருஷத்துக்கு முன்னாடி “ஓம்சண்முகா” ன்னு ஒரு கொட்டாயித் தியேட்டர் இருந்துச்சி …சாயந்தரமாச்சுன்னா சுத்துப்பட்டி மக்களுக்கெல்லாம் இந்த ஓம்சண்முகா தியேட்டருதான் போக்கிடம்…அப்போலாம் சன் டீவி , ஜெயாடீவி , F டீவி (:-) எதுவுமே கிடையாதுல ….எங்க ஊரைச் சுத்தி  , சின்னப் பொட்டல்பட்டி , பெரிய பொட்டல்பட்டி ,அம்மாபட்டி ,சிங்கம்பட்டி ,கிச்சநாயக்கன் பட்டி , சூரநாயக்கன்பட்டி , ஊராம்பட்டி , போடுரெட்டியபட்டி , மாரனேரி , பூலாஊரணி,
காமராஜர் காலனி  இப்படி… ஏகப்பட்ட குட்டி குட்டி ஊரு இருக்குங்க

இந்த தியேட்டர்ல தினமும் ரெண்டு சோ போடுவாய்ங்க .. ஏழு மணிக்கு ஒன்னு , பத்து மணிக்கு ஒன்னு … சாயந்தரம் 6 மணி ஆச்சுன்னா விநாயகனே வினை தீர்ப்பவனேன்னு குழாய் ரேடியோல பாட்டப் போட்ருவாய்ங்க..ஓரளவுக்கு கூட்டம் சேந்திருச்சின்னா கரெக்டா ஏழு மணிக்கு டான்னு படத்தப்  போட்டுருவாய்ங்க . இல்லேன்னா கொஞ்சம் இழுத்தடிப்பாய்ங்க , படம் போடுறதுக்கு அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி கடைசி ரெக்கார்டுன்னு ஒன்னு போடுவாய்ங்க ,” டொடன் டொடன் டோய் டோன் டோன்ய்ன்னு … ” பாடும் . அது முடிஞ்சதும் படத்தப் போட்டுருவாய்ங்க ,படம் போட்டாச்சுன்னா , தியேட்டருக்கு மேலே பச்சைக்கலரு நீள் குழல் விளக்கு எரியும். அதப்பாத்துட்டு வெளிய இருக்குற மக்கள் படம் ஆரம்பிச்சிருச்சுன்னு தெரிஞ்சுக்குவாங்க

தியேட்டர்ல மூணு விதமான டிக்கெட்டுகள் , தரை , பெஞ்ச் ,சேர் , நமக்குலாம் எப்பையும் தரைதான் வசதி ஒரு துண்ட விரிச்சிப் படுத்துக்கிட்டே படம் பாப்பேன் , நடுல நடுல இடைவேளைக்கு முறுக்கு வாங்க வச்சிருக்குற கால் ரூவா டவுசர் பாக்கட்ல இருக்கா.. இல்ல உருண்டு கீழே போயிருச்சான்னு  பாத்துக்குவேன்..

0

இந்தத் தியேட்டர்ல படம் கொஞ்சம் சுமாராத் தான் தெரியும் , ஏன்னு கேட்டிங்கன்னா ..கார்பன் குச்சுன்னு ஒன்னு இருக்கு , ஆபரேட்டர் ரூமுல இந்தக் கார்பன் குச்சியை எரிச்சு அதுல வர்ற வெளிச்சத்துல தான் நமக்கு படம் காட்டுவாய்ங்க , நேரம் ஆக ஆக இந்தக் குச்சி தேஞ்சிட்டே போவும்..
பெரிய பெரிய டவுன் தியேட்டர்லலாம் இந்தக் கார்பன் குச்சி சின்னதானதும் அத எல்லாம் பெறக்கி கிராமத்துல இருக்குற சின்னத் தியேட்டருக்கு வித்துப்புடுவாய்ங்க .. பெரும்பாலும்  இந்த மாதிரித் தேஞ்சு போன குச்சிய வச்சிக்கிட்டுதான்  சின்னத் தியேட்டர்களில் படம் காட்டுவாங்க .. இப்படிக்காட்டுனா மங்கலாத்தான தெரியும் ..

நான் அஞ்சு வயசுல இருந்து ஒரு பதினஞ்சு வயசு வரைக்கும் அடிக்கடி இந்த தியேட்டர்ல படம் பாத்திருக்கேன்..நான் பாத்த பெரும்பாலான படங்களில் இந்த மாதிரி காட்சிகள் கண்டிப்பா வரும்

0

படத்துல ரெண்டு ஹீரோன்னு வச்சுக்கங்க , அதுல ஒருத்தன் கோழையாவோ  அல்லது கெட்டவனாவோ இருப்பான் ஆனா கடைசில திருந்திருவான்.
0

ஹீரோ எங்கயாச்சும் போவாரு , அங்கனக்குள்ள ஒருத்தன் கத்தியால குத்துப்பட்டு செத்துக் கிடப்பியான் ,ஹீரோ பாத்துக்கிட்டு  சும்மா இருக்க மாட்டாரு  அந்தக் கத்திய உருவுவாறு , அந்த  நேரம் பாத்து போலீஸ் வந்துரும் ,உடனே ஹீரோ ஸ்தம்பிச்சுப் போயி .. ” இன்ஸ்பெக்டர் என்ன நடந்தெதுன்னா…. ” ன்னு வாயெடுப்பார் ..அதுக்குள்ள இன்ஸ்பெக்டர் , ” நீங்க சொல்லவேண்டியதெல்லாம் கோர்ட்ல வந்து சொல்லுங்க “ங்குற வழக்கமான டையலாக்கச் சொல்லி ஹீரோ வாயை அடைச்சிப்புடுவாரு

0

கொள்ளைக்கூட்டத்த கண்டுபிடிக்கப்போறாங்கன்னா , அப்போ ஒரு கிளப்டான்ஸ் வரும் பின்குரலில் ஜானகி அம்மா இழுத்து இழுத்துப் பாடும் , அனுராதா லொங்கு லொங்குன்னு ஆடும்  , ஹீரோவும் மாறுவேஷத்துல கூடச் சேந்து ஆடுவாரு, நமக்குலாம் அது ஹீரோ தான்னு நல்லா அடையாளம் தெரியும் ஆனா அந்த கொள்ளக் கூட்டத்துக்காரங்க இருக்காய்ங்கள்ள, அவிங்களுக்கு கண்ணளவு தெரியாது..மாறுவேஷத்துல இருக்குறது  ஹீரோதான்னு அவிங்களுக்குத் தெரியாது

0

வில்லனை மொட்டைமாடில வெரட்டுற மாதிரி ஒரு சண்டை வந்திச்சின்னு வச்சிக்கோங்க , கண்டிப்பா ஹீரோ உச்சியில இருந்து தொங்குன மானக்கி ஒரு சீனு வரும் , வில்லான் பூட்ஸ் காலால ஹீரோ கையில நளுக்கு நளுக்குன்னு மிதிப்பார் , ஆனா ஹீரோ  கைய மாத்திப் மாத்திப் போட்டுப் பிடிச்சி எப்பிடினாலும் சமாளிச்சிருவாரு, அப்பிடியே தப்பித் தவறி கீழ விழுந்தாலும் ஒரு வைக்கோப்போர் ஏத்திட்டுப் போற லாரி மேலதான் விழுவாரு..

0

பெரும்பாலும் போலீஸ் ஏட்டா நடிக்குறதுக்குனே மூணு பேரு இருப்பாங்க.. ஒருவிரல் கிருஷ்ணராவ் , தயிர்வடை தேசிகன் மற்றும்  வெள்ளைசுப்பையா

0

வில்லன் ஹீரோவச் சுடுற நேரம் பாத்து , அவன் அம்மாவோ தங்கச்சியோ குறுக்க விழுந்து செத்துப்போவாங்க ..இந்த எதிர்பாராத சம்பவத்துனால வில்லன் நிலைகுழஞ்சி போவாரு , ஹீரோவுக்கு வெளம் பொத்துக்கிட்டு வந்துரும்
உடனே விலலன் துப்பாக்கிய கீழ போட்டுட்டு புறமுதுகிட்டு ஓருவாரு

0

கடைசியா கிளைமாக்ஸ் சண்டைக்கு முன்னாடி ஹீரோவோட அப்பன் ஆத்தாவ வில்லன் கடத்திட்டுப் போயி ஒரு பாழடைஞ்ச பங்களாவுல கட்டிப் போட்டிருப்பான் , தலைக்கு மேல மரம் அறுக்குற ரம்பம் கிர் கிர்ர்னு சத்தம் போட்டுட்டு இருக்கும் , திடீர்னு பாத்தா எங்கிட்டோ இருந்து ஹீரோ
ஒரு புல்லட்ல காலி அட்டைப் பெட்டிகளையெல்லாம்  துளைச்சிட்டு பீறிக் கிளம்பி வந்து அப்பன் ஆத்தாவ காப்பாத்திருவாரு ..அப்புறம் ஒரு பெரிய சண்டை நடக்கும் , சண்டை முடிஞ்சதும் , காமெடியன்  போலீஸக் கூட்டுட்டு வந்துருவாரு

0

இதுல எதாச்சும் விட்டுப் போயிருந்திச்சின்னா , நீங்களும் சொல்லலாம்…

 

December 19, 2005

புதுவீடு கட்டியாச்சு !

Filed under: General — மரவண்டு @ 3:26 pm

வாங்க வாங்க

அந்த பழைய செங்காமட்டிக் கலரு வீடு சரிப்பட்டுவரலை , அதான் இங்க மாறி வந்துட்டேன் , எப்படி இருக்கு புதுவீடு ! இனிமேல் இந்த வீட்டுல தான் குடித்தனம் நடத்தப் போறேன்.இன்னும் கொஞ்சம் பூச்சு வேலை இருக்கு , அதை முடிச்சிட்டு எழுத ஆரம்பிக்கணும்.வழக்கம் போல நான் ரசித்த இலக்கியங்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்வேன்.அப்பப்போ ஒப்பேத்துற பதிவும் போடுவேன் , கண்டுக்கப்படாது.

இந்தப் படத்தப்பாருங்க, சூப்பரா இருக்குல

பெறவு பாப்போம்

என்றும் அன்பகலா
மரவண்டு

Create a free website or blog at WordPress.com.