மரவண்டின் ரீங்காரம்

March 21, 2006

பழமொழி வாங்கலயோ பழமொழி

Filed under: Uncategorized — மரவண்டு @ 1:48 pm

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமப்புறம் என்பதால் பழமொழிகளோடு
எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு.கிராமப்புற மக்களின் அன்றாட சம்பாஷணைகளில்
அவர்களை அறியாமலே பழமொழியும் கலந்து வரும்.நான் கண்ட கேட்ட
பழமொழிகளை எல்லாம் ஒரு நோட்டிலோ டைரியிலோ அவ்வப்போது
குறித்துக் கொள்வது  வழக்கம்.இந்தக் கட்டுரையை காலம் சென்ற எனது
ஆச்சி ஆவடையம்மாளுக்குச் சமர்ப்பிக்கிறேன் 🙂

0

பழமொழியை அனுபவத்தின் குழந்தைகள் என்று சொல்வார்கள்.ஆகையால்
பழமொழியை பிழைமொழி என்று சொல்லிப் புறங்கையால் ஒதுக்கிவிடமுடியாது.
தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது , முதுசொல், முதுமொழி,பழஞ்சொல்,மூதுரை
என்று பலவாறாக குறிக்கப்படுகிறது.தொல்காப்பியத்தில் பழமொழிக்கான விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.

0

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்ததற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப – தொல்காப்பியம்

0

நெல்லை மாவட்டத்தில் பழமொழியைச் சொலவடை என்றும் , பழைய ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஒவகதை என்றும் சேலத்தில் சொலவந்தரம் என்றும் கோவையில்
ஒப்புத் தட்டம் என்றும் அழைக்கிறார்கள்.ஆங்கிலத்தில் பழமொழியானது
Proverb என்றும் old sayings என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான தமிழ்ப் பழமொழிகள் எதுகை மோனையிலும் , முரண்தொடையிலும்
எழுதப்பட்டுள்ளன.இதுவரை தமிழில் வெளிவந்த பழமொழித் தொகுப்பு
நூல்களை கீழே கொடுத்துள்ளேன் , இவற்றுள் கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்
எழுதிய புத்தகத்தில் சுமார் 20000 பழமொழிகளுக்கு மேல் தொகுக்கப்பட்டுள்ளன.

பழமொழிப் புத்தகங்கள்
(1)  தமிழ்ப் பழமொழிகள் (1842), பெர்சிவல்
(2)  பழமொழி (1870), லாரி
(3)  மாணவர்களுக்கான தமிழ்ப் பழமொழிக்கேற்ற ஆங்கிலப்பழமொழிகள்
     (1874), இராமசாமி அய்யங்கார்
(4)  பழமொழி புத்தகம் (1877),வேணுகோபால் நாயுடு
(5)  பழமொழித் திரட்டு (1888) , குப்புசாமி நாயுடு & கருப்பண்ணபிள்ளை
(6)  தமிழ்ப் பழமொழிகளும் அவற்றிற்கிணையான ஆங்கிலப் பழமொழிகளும்
     (1893), சுந்தர சாஸ்திரியார்
(7)  A Dictionary of Proverbs , John Lazanus 1894
(8)  A Dictionary of Tamil Proverbs , Haman Jenson 1897
(9)  இணைப் பழமொழிகள் , (1899) செல்வகேசவராயர்
(10) பழமொழித் திரட்டு , பார்த்தசாரதி பிள்ளை (1902)
(11) பழமொழி அகராதி , அனைவரத விநாயகம் பிள்ளை 1912
(12) பழமொழித் தீபிகை , சிதம்பரம் பிள்ளை 1916
(13) 1001 அபூர்வ பழமொழிகள் , கஸ்தூரி திலகம் 1946
(14) பழமொழி விளக்கக் கதைகள், இனியன் 1950
(15) ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப்
     பழமொழிகளும் , நீலாம்பிகை அம்மையார் , 1952
(16) பழமொழித் திரட்டு , சுப்பிரமணிய நாவலர், 1955
(17) பழமொழிக் கொத்து, வி.நந்த கோபால் – 1957
(18) தமிழ் நாட்டுப் பழமொழிகள் , எஸ்.கே.சாமி – 1960
(19) தென் மொழிகளில் பழமொழிகள், ரா.பி.சேதுப்பிள்ளை , 1962
(20) பழமொழியும் பண்பாடும் , செந்துறை முத்து , 1965
(21) பழமொழி ஓராயிரம் , எஸ்,ஏ.சுலைமான் , 1968
(22) பழமொழிகள் , தமிழ்வாணன் , 1976
(23) பழமொழிகளில் வேளாண்மை அறிவியல் , ந.வி.ஜெயராமன் 1981
(24) சமுதாய நோக்கில் பழமொழிகள் , சாலை இளந்திரையன் , 1975
(25) பல்நோக்கில் பழமொழிகள் , வி.பெருமாள் 1986
(26) தமிழ் பழமொழி இலக்கியம் , எஸ்,செளந்தர்ராஜன் 1990
(27) தமிழ்ப் பழமொழிகள்(20,000) , கி.வா.ஜெகந்நாதன் 1988
சில பழமொழிகளும் , சில பொன்மொழிகளும்
சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம்

இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?

தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது

கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி

கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்

அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது

அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்

ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்

ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்

அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை

அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து
தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு

அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்

அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்

படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்

ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்

ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு

அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்

அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்

மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

செவிடன் இருமுறை சிரிப்பான்

ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்
பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்

ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்

பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்

குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.

அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்

ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை

கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்

வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
தோண்டிக்கொள்கிறான்

இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது

உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..

உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்

தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது

பழமொழியில் உமி கிடையாது

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும்
அதிகமாய்க் குத்தும்

உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்

ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின்
அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக்
கொண்டே இருக்கும்

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
ஒரு விலாங்கும் இருக்கும்

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்
பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்
வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்

சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

பழைய இஞ்சியில் காரம் அதிகம்

உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்

பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்

மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்

தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்

தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

**********************************************************************

துணை நூற்பட்டியல்
(1) நாட்டார் வழக்காற்றியல் : சில அடிப்படைகள் – தே .லூர்து
(2) நாட்டுப்புற இயல் ஆய்வு – ச.சக்திவேல்
(3) உலகப்பழமொழிகள் – ப.ராமஸ்வாமி
(4) தமிழ்ப்பழமொழிகள் – எழுதியவர் பெயர் ஞாபகத்திலில்லை

மேலும் சில புத்தகங்கள் மற்றும் சில கிழவிகள் 🙂

என்றும் அன்பகலா
மரவண்டு

 

March 10, 2006

ஆட்டுக்குட்டி + போட்டி

Filed under: Uncategorized — மரவண்டு @ 2:55 pm

கம்பளி இருந்தும்
சளியுடன் தும்மும்
செம்மறி ஆடு ! – அமுதபாரதி

0

நம்மலாம் ” அச் …. அச் …” னு தான தும்மல் போடுவோம்,
ஒவ்வொரு “அச்” சுக்கு அப்புறம் “அம்மா” , “அப்பா” ன்னு ஏதாவது ஒன்னு சொல்லணும்,” அச் …. அச் …” னு மொட்டையாத் தும்முனா..
எங்க ஆச்சி ” ஏ நோனி.. ஏன் செம்மறிக் கெடா மாதிரி தும்முற ?
அம்மா அப்பான்னு எதாச்சும் சொல்லணும்” அப்படிங்கும்..

நாங்க எங்க வீட்டுலயே ஒரு செம்மறிக்குட்டி வளத்தோம் .
பேரு டேனியல் ,  டேனியல் எங்க அம்மா செல்லம்,எங்க அம்மா எங்க  போனாலும் பின்னாடியே போவான். நான் தான் தினமும்  அதுக்கு புட்டிப்பால் குடிப்பேன், டேனியல் நல்லா பெருசா ஆனதும் ஒரு ஆளுகிட்ட எங்க ஐயா வித்துட்டார்..

0

வரம் – ஆதவன்தீட்சண்யா

“ஆத்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்…”

ஏண்டா கும்பிடுறதுக்கு பொம்பள சாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா …
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிறும் வேணாம்


0

நாங்க எங்க ஊருல ஆட்டுக் கறிக்கடை வச்சிருக்கோம்,நாங்களே சொந்தமா ரொம்ப ஆடு வளக்குறோம்.தீபாவளி அப்பலாம் விடிய விடிய கடை துறந்திருக்கும்,நாப்பது அம்பது கடா வரைக்கும் அறுப்பாங்க , ஆட்டுக் காலு , தலை இதையெல்லாம் தீயிலே வாட்டி முடியெல்லாம் எடுப்பாங்க , எங்க கடைல சொக்கன்னு ஒருத்தர் வேலை செஞ்சார், அவர் தான் காலு மண்டைய வாட்டுவார்.நான் பக்கத்துல நாய் எதும் வராத படிக்கு காவலுக்கு இருப்பேன்.மண்டைய வாட்டும் போது ஆட்டுக் காது ரெண்டும் புஷ்னு புடைச்சு ஊதி டொப்புன்னு வெடிக்கும்.நான் உடனே வெடுக்குன்னு காதுக்கறியைப்
புடுங்கித் தின்னுப்புடுவேன்.அதப்பாத்துட்டு எங்க சின்னய்யா ” எலே பேக்கூ_
காதப் பிச்சிட்டா , சின்ன மண்டையாத் தெரியும்டானு  சத்தம் போடுவாரு,
ஆனாலும் நான் கேக்காம பிச்சிப் பிச்சித் தின்னுட்டுதான் இருப்பேன் .

0
ஞாயித்துக் கிழமை சாயந்தரம் ஆச்சுன்னா சைக்கிள எடுத்துக்கிட்டு
கருசக் காட்டுக்குப்  போவேன்.எங்க தெருவுல சங்கிலின்னு ஒருத்தன் இருக்கியான்,
அவனும் நானும் தான் சேந்து போவோம்.அரிசிக் குழைன்னு  ஒரு செடி இருக்கு ,
அந்தச் செடிய ஆடுக நல்லாத் திங்கும் , அந்தச் செடி கரிசகாட்டுல எக்கச்சக்கமா
முளைச்சு புடுங்குறதுக்கு ஆளு இல்லாமக் கிடக்கும்.அந்தச் செடில இருக்குற
இலை அரிசி மாதிரியே குட்டியா இருக்கும் .. அதுனாலத்தான்
அதை அரிசிக்குழைன்னு சொல்லுவாங்க ,ஆடுக இருக்கே அதுக அகத்திக்கீரையும்
ரொம்பா நல்லாத் திங்கும் , ஒரு குழை கெட்டி வச்சா செத்த நேரத்துல  மொக்கித் தின்னூடும்.சில ஆடுங்க சோளத்தட்டை திங்கும் போது தொண்டைல சிக்கிக்கிடும் , இதை ஆட்டுக்கு சொருவிக்குச்சுன்னு சொல்லுவாங்க,தட்டை வசமாச் சிக்கிக்கிச்சின்னா ,உடனே ஆட்டுக்கு இழுக்க ஆரம்பிச்சிடும்,சாவுறதுக்குள்ள  அறுத்து உப்புக்கண்டம் போட்டு
வெயில்ல காய வச்சிருவோம் , ஒரு கிலோ கறி காஞசதுக்கப்புறம் காக்கிலோ ஆயிடும், காஞ்ச கறியை எண்ணைல வறுத்துத் திம்பாங்க …

0

வெட்டிய ஆட்டிற்கு
சவக்குழி
ஒரு ஜான் வயிறு – யாரோ

0
கிராமத்துலலாம் நிலத்தை உழுது முடிஞ்சதுக்கப்புறம் வெள்ளாமை போடுறதுக்கு முன்னாடி அந்த நிலத்துல ஆட்டுக்கிடையோ மாட்டுக் கிடையோ போடுவாங்க.அதாவது மொத்தமா ஒரு நூறு ஆடுகளையோ மாடுகளையோ உழுது போட்ட நிலத்துல கெட்டிப் போட்டுறவாங்க ,அதைத் தான் கெடை போடுறதுன்னு சொல்லுவாங்க ..ஆடு மாடுக போடுற முறையே புழுக்கையும் ,சாணியும் நிலத்துக்குநல்ல உரம்.நான்லாம் ஆட்டுப் புழுக்கைய ஆச்சரியாமப் பாப்பேன், எப்படி இந்த ஆடுக மட்டும் கொண்டக் கடலை மாதிரியே புழுக்கை போடுதுன்னு ?

0
 

கெடாத்தொங்கு – ஏக்நாத்

கழுத்து
தொங்கு விழாம
கெடா வெட்டுனா தான்
குடும்பம் உருப்படும்

சுருட்டு சுப்பையா
போட்டு வைத்ததிலிருந்து
பரமசிவத்துக்கு குலை நடுக்கம்.

போன முறை
கெடா வெட்டின
குட்டையன் கால்
ஒடிஞ்சு போனது
ஞாபகத்துக்கு வந்து
திக்கென்றது.

ஆறேழு வருஷத்துக்கு
முன்பிருந்து
கெடா வெட்டியவர்கள்
வரலாறு புரட்டினார்கள்

வேண்டாம் வேண்டாமென்று
தலையிலடித்தாள் மனைவி.

இப்ப மாட்டேன்னா
கவுரதை குறையும்.

கொஞ்சம் பயமும்
கொஞ்சம் வீராப்பும் கலந்து
ஒத்தக் காலில் நின்றான்
நான் தான் வெட்டுவேனென்று.

கொடை நாளில்
மனசும் கையும் நடுங்க
வெட்டிய நான்கு
கெடாக்களுமே தொங்கு தான்.

0
தமிழில் மொத்தம் 13 ஆயிரம் பழமொழிகள் இருக்கின்றன,இவற்றுள் பெரும்பான்மையான பழமொழிகள் விவசாயம் சம்பந்தப்பட்டவை.பதிவோடு தொடர்புடைய ஒரு பழமொழி..

ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்காருக்கு மூணு கொம்பு

 

0

அக்கா வளர்த்த ஆடு
நிற்கிறது அய்யனாருக்கென்று..
மாலையிட்டு நீரேற்றி
ஒரு நாள் கேட்டனர்…
குளிரில் உதறிய தலை
குறிப்பாய்ச் சொல்லிவிட்டதாம்
” இப்போது பூசை வேண்டாம்
அய்யானார் காத்திருக்கிறார் ”

அக்கா தனக்குப் பார்த்த மாப்பிள்ளையை
பிடிக்கவில்லை என்றாள்..

“உதை விழும் கழுதை…
உனக்கென்ன தெரியும்”

அப்பா மிரட்டலில்
அக்கா ஆசைகள் அணைந்தன
துள்ளிக் குதிக்கிறது
அக்கா வளர்த்த ஆடு
பாவம் அவள் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள் – முத்தையன்

0
 

போட்டி
கேள்வி 1 :

கீழே இருப்பது  சிறுகதை ஒன்றின் முதல் பத்தி,இந்தக் கதையின் தலைப்பு என்ன ?
கதையை எழுதிய எழுத்தாளர் யார் ?

பெரிய கருப்பன் பதினாறு வெள்ளாடுகள் வளர்த்தார்.தெருமுக்கில் அவரது கூரைவீட்டுத் திண்ணை சாணிமெழுகிக் கிடக்கும். எதிரே ஆகாயத்துக்கு வளர்ந்து பெரும்பெருங்கிளைகளோடும் அடிமரத்தில் பிசினோடும் நிற்கும் வேப்பமரக் காற்றை வாங்கியபடி பார்த்தால்,அருகிலுள்ள கட்டாந்தரையில் நீளநீளமான மொக்காங்கட்டைகளில் பதினாறு ஆடுகள் சின்னதும் பெரியதுமாகக் கட்டப்பட்டுக் கிடக்கும் .

பெரிய கருப்பன் விடிகாலை ஆறுமணிக்கெல்லாம் கஞ்சி குடித்து , கக்கத்தில்
ஒரு சாக்கோடு மொக்காங்கட்டைகளிலிருந்து பதினாறு ஆடுகளையும் தும்பு தெறித்து ஆளுயரக் கத்திக் கம்பை முதுகில் வைத்து,இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உள்ளே விட்டுத் தெருப்பூராவையும் நடக்கும் பரப்பாக்கிக் கிளம்புவார்.பதினாறு ஆடுகளும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவை போல் பெரியகருப்பன் பின்னாலேயே நடக்கும்.அவர் வேகமாக நடந்தால் வேகமாக மெள்ள நடந்தால் மெதுவாக , பதினாறும் ஒன்று போல் நடையில் அவர்பின்னால் நடக்கும்.

கேள்வி  2:

இவர் ஒரு இரண்டெழுத்து நடிகை. இவரின் பெயரில் வரும்
இரண்டு எழுத்துக்களுமே ஒரே எழுத்து தான்.இவர் ஒரே ஒரு தமிழ்ப்
படத்தில் மட்டும் தான் கதாநாயகியாக நடித்தார்.அவர் யார் ?

கேள்வி 3 :

ரஜினிகாந்த் நடித்த திரைப்படமொன்றின் பெயரிலேயே  ஒரு சிற்றிதழ் வெளிவந்தது.அந்தப் படத்தின் பெயரும் , அந்த எழுதாளரின் பெயரும் நான்கு எழுத்துக்கள் கொண்டவை.அந்த சிற்றிதழின் பெயரென்ன ? அந்த சிற்றிதழை நடத்திய எழுத்தாளர் யார் ?
கேள்வி 4 :

நீயில்லையேல் பாவைமனம் பாலைவனம் இந்த வரி இடம் பெற்ற பாடல் எது ?

கேள்வி 5 :

அரங்கநாதன் என்ற பெயரை இயற்பெயராகக் கொண்ட தமிழ்க் கவிஞரின்
புனைபெயர் என்ன ?

0

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படும்.
ஒரே கேள்விக்குப் பலர் சரியான விடை அளித்தால் முதலில் பதிலளித்தவருக்கே
பரிசு வழங்கப்படும்

March 8, 2006

Happy women’s Day

Filed under: Uncategorized — மரவண்டு @ 2:17 pm

Women's day

பெண்ணாகிய பிசாசு புன்னகை என்னும்
முகமூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறது – கலில் ஜிப்ரான்

Create a free website or blog at WordPress.com.