மரவண்டின் ரீங்காரம்

May 31, 2006

இலக்கியவாதிகளின் பஞ்ச் டையலாக்குகள்

Filed under: Uncategorized — மரவண்டு @ 4:14 am

பேரளவு துன்பத்தின் சாயை படியாது வெறும் உயிர்ப்பிண்டமாக வாழ்ந்த ஒரு வாலிபன் திடீர் என்று உலகத்தில் இயல்பாக இருந்து வரும் கொடுமைகளையும் அநீதிகளையும் சமூகத்தின் வக்கிர விசித்திரங்களையும் கண்டு ஆவேசமாகக் கண்டதைத் தன் மன இருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க்கனவுகளாகும் என் கதைகள்.அதாவது பூர்வ கதைகளின் கரு அது தான் . அவற்றில் கதைக்குரிய கதைப்பின்னல் கிடையா.அவற்றிற்கு ஆரம்பம் முடிவு என்ற நிலைகளும் பெரும்பான்மையாகக் கிடையா.மன அவசத்தின் உருவகம் கதைகள் என்பதை ஒப்புக் கொள்வதனால் அவை கதைகளும் ஆகும்.இம்மாதிரியான முறையை அனுஷ்டித்து மேல்நாட்டில் கதைகள் பிரசுரமானது சகஜம்.அந்த முறையைத் தமிழில் இறக்குமதி செய்த பொறுப்பு அல்லது பொறுப்பின்மை என்னுடையதாகும் – ( புதுமைப்பித்தன் – சதங்கை ஜனவரி-மார்ச் 1998 )

 0

 சிறுவயதில் நான் மிகவும் நோஞ்சானாக இருந்தேன்.அதனால் சகசிறுவர்களிடமிருந்து நான் ஒதுங்கியிருந்தேன்.இந்தத் தனிமையே எனக்குள் தீராத காம வேட்கையை உண்டாக்கியது.சரீரமும் சரீர இச்சைகளும் என்னை ஒரு மர்மமான மனவெளிப் பிரதேசத்தில் இட்டுச் சென்றன.அடர்ந்த கானகத்தில் தனியாய்த் திரியும் வனவாசியைப் போல் ஆனேன்.சரீரத்தின் புதிர்களை சொற்களின் மூலமாகக் கடக்கவிரும்பினேன் / காதலின் மீதான வசீகரத்திலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.எந்தக்கட்டத்திலும் யாரோ ஒரு ஸ்திரீயை மிகத் தீவிரமாகக் காதலித்தபடியே இருக்கிறேன்.தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஒரு பெண்ணைக் காதலித்தேன்.அவளுக்கு எண்ணற்ற கடிதங்கள் எழுதினேன். ஆயிரம் பக்கங்கள் இருக்கலாம்.அதை வெட்டி ஒட்டிச் சுருக்கியது தான் ஸீரோ டிகிரி – ( சாருநிவேதிதா / கவிதாசரண் – செப்டம்பர் 2004)

 0

 பாரதி நமது ஆசான்.நமது என்றால் என்னுடைய , உன்னுடைய,இந்த மொழியில் எழுதுகிற எழுதப் போகிற அனைவருடையதும்.. ஒரு தடவை க.நா.சுப்பிரமணியம் கேட்டார்," பாரதி பாரதி என்று சொல்லிக்கிட்டிருக்காயே .. பாரதி எழுதலேண்ணா என்ன பண்ணியிருப்பே ? " என்று , " அதையெல்லாம் நான் எழுதியிருப்பேன்" என்று பதில் சொன்னேன்.பாரதி நம்மிலிருந்து வேறல்ல.நமது கனவுகளிலிருந்து பிறந்தவன் அவன்.நம்முடைய இலக்கியத்தின் ஒவ்வொரு கிளையும் அவனால் தொடங்கப்பட்டதுதான் – ( ஜெயகாந்தன் /  சொல்புதிது – நவம்பர் 1999)  

0

  கடைசிவரை நான் யதார்த்தவகை எழுத்துக்களையே எழுதுவேன்.இலக்கியமே யதார்த்தம் தான்.கடைசிவரை யாதர்த்தமே நிலைக்கும்.மற்றவகைகளெல்லாம் வரும் போகும்.இப்ப பண்ணப்படுகிற மேஜிக்கல் ரியலிசமெல்லாம் கூட மறுபடியும் ரியலிசத்திற்குத் தான் வரும் . வாழ்க்கை என்றைக்கு மேஜிக்கல்லாகுதோ அன்றைக்கு இலக்கியம் மேஜிக்காகலாம்.வாழ்க்கை எப்போது மித்(Myth) ஆகுதோ அப்ப கதைகளெல்லாம் மித் ஆகலாம். – ( வண்ணதாசன் (கல்யாண்ஜி) / சுபமங்களா – ஜூலை 1994 )

 0

  கவிதை எந்த வழிக்குக் கொண்டுபோகிறதோ அந்த வழியில் சென்று முடிவது தான் என் நோக்கம்.இன்றைய தமிழ்க்கவிதை என்னைத் தாண்டிப் போய்விடவில்லை. சங்க இலக்கியத்திலிருந்து பாரதிவரையிலான கவிஞர்களில் நான் யாருக்கும் குறைந்தவனில்லை – ( ஞானக்கூத்தன் / சுபமங்களா – அக்டோபர் 1992 )
 0

  என் கவிதைகளில் நதி நிறைய வரும்; பால்ய காலத்தில் படிந்த தாமிரவரூணியின் பாதிப்புதான் என்று இப்போது தோன்றுகிறது; நான் விரும்புவது நதிக்கரை நாகரீகம், விதிக்கப்பட்டது நெரிசல் மிக்க நகரம்;நான் திருநெல்வேலியிலேயே வாழ்கிற மாதிரி இருந்திருந்தால் வண்ணநிலவன், வண்ணதாசன் போன்ற ஸ்திரமான சிறுகதை எழுத்தாளனாகவோ , கலாப்ரியா போல ஸ்திரமான கவிஞனாகவோ வந்திருப்பேன் . இப்போது இருக்கிறது போல சிதறும் மனம் கொண்ட கவிஞனாகி இருக்கமாட்டேன் – ( கவிஞர் விக்ரமாதித்யன்/மேலும் – ஆகஸ்ட் 1992)

 0

  கரிசல்காடு வறட்சியான பூமியான போதிலும் எழுத்தாளர்களுக்கு வண்டி வண்டியாக விசயங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.வாழ்க்கை எல்லா இடங்களிலும் முடிவற்ற நதியாக ஓடிக்கொண்டு இருப்பது போலத்தான் கரிசல் பூமியிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் என் கை அளவுக்கு அள்ளி அள்ளி எழுத்தாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.என் எழுத்து எப்போதும் கரிசல் காட்டைப் பற்றியதாகவே இருக்கும்.நகரத்துக்கு வருகிறேன்,அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.இவையெல்லாம் என் பார்வையை விசாலப்படுத்தும். ஆகாயம் முழுக்க என் இறக்கைவிரிந்தாலும் என் கால்கள் கரிசல் காட்டில்தான் இருக்கும் – ( மேலாண்மை பொன்னுச்சாமி / புத்தகம் பேசுது – ஏப்ரல்-மே 2005 )

0

தமிழ்நாட்டில் அதிக கவியரங்குகளில் கலந்து கொண்டவன் நான் தான்.கவியரங்க மேடைக்குப் புதுக்கவிதையை நான் தான் அறிமுகப்படுத்தினேன்.கவியரங்கை நான் ஒரு பரிசோதனை சாலையாகவே மாற்றினேன்.இன்றைய கவியரங்க நிகழ்ச்சிகள் தோற்றுப்போய்விட்டன.கையாளத் தெரியாதவர்கள் கையாண்டு அதைக் கெடுத்து விட்டார்கள் . அதனாலேயே கவியரங்கங்கள் பற்றித் தவறான அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது (அப்துல் ரகுமான் / சுபமங்களா – ஜனவரி 1994)

0

  எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல;வேள்வி அல்ல;பிரசவ வேதனையல்ல; ஆத்மசோதனையோ சத்தியசோதனையோ அல்ல;பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல;வாழ்க்கையைத் தேடும் முயற்சி ; என் சுயத்தைத் தேடும் முயற்சி;- (நாஞ்சில் நாடன்/நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று)

0

  தமிழர்களுக்குப் பொதுவாக பெரிசாக எதைப்பார்த்தாலும் ஒரு அதிர்ச்சி,பிரமிப்பு. அதனால் தான் யார் பெரிய கட் அவுட் வைப்பது என்ற போட்டி இங்கே முக்கியமாக இருக்கிறது.எண்ணூறு பக்கத்தில் டெம்மி சைஸில் ஒரு புத்தகம் வந்தால் அதைப் படிக்காமலேயே எழுதியவருக்கு அறிஞர் பட்டம்  கொடுக்காமல் சும்மா விடுவார்களா? விஷ்ணுபுரத்திற்கும் , ஜெயமோகனுக்கும் இந்தப் பெருமையைச் சாற்றுவதற்கு தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள் – ( பொ.வேல்ச்சாமி – நிறப்பிரிகை – மே 1998 )

 0

  தனிமையின் அமாவாசையில் என் குழந்தைப் பருவத்தில் நான் பெற்ற ஒரு துளி வெளிச்சம் தான் கவிதை . குழந்தைகள் சொல்வதுண்டு "குருவிக்கு அதன் கூட்டில் இரவுநேர ஒளி மின்வெட்டான் பூச்சி " என்று , எனக்கானால் அது கவிதை – ( மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு / சுபமங்களா ஏப்ரல் 1993 )

2 Comments »

  1. //கொடுமைகளையும் அநீதிகளையும் சமூகத்தின் வக்கிர விசித்திரங்களையும் கண்டு ஆவேசமாகக் கண்டதைத் தன் மன இருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க்கனவுகளாகும் என் கதைகள்

    //ஒரு பெண்ணைக் காதலித்தேன்.அவளுக்கு எண்ணற்ற கடிதங்கள் எழுதினேன். ஆயிரம் பக்கங்கள் இருக்கலாம்.அதை வெட்டி ஒட்டிச் சுருக்கியது தான் ஸீரோ டிகிரி

    //பாரதி எழுதலேண்ணா என்ன பண்ணியிருப்பே ? ” என்று , ” அதையெல்லாம் நான் எழுதியிருப்பேன்” என்று பதில் சொன்னேன்

    //சங்க இலக்கியத்திலிருந்து பாரதிவரையிலான கவிஞர்களில் நான் யாருக்கும் குறைந்தவனில்லை

    //கவியரங்க மேடைக்குப் புதுக்கவிதையை நான் தான் அறிமுகப்படுத்தினேன்

    செம மேட்டர்பா… புல்லரிக்குது! 🙂

    Comment by 'Rajni' Ramki — May 31, 2006 @ 9:01 am | Reply

  2. இந்தப் பதிவு சூப்பரா இருக்குன்னு அன்புடன்ல பேசிக்கிறாங்க… மக்களின் பின்னூட்டங்கள் இங்கே:
    மரவண்டு கணேஷ் பக்கம்
    http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/22e8fea5af012000

    Comment by சேதுக்கரசி — June 2, 2006 @ 4:14 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.