நகுலனின் மறைவுக்கு நிறைய பதிவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தார்கள் . நண்பர் பாலசுப்ரா நகுலனைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து வெளியிட்டிருந்தார் . அவருக்கு எனது நன்றிகள். வலைப்பூவிற்கு இலக்கியம் என்று பெயர் வைத்துக் கொண்டு நகுலனைப் பற்றி எழுதாதது எனக்குக் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்து வந்தது.
சிற்றிதழ்களில் வெளியான நகுலனின் விமர்சனக் கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். மேலும் நகுலனின் சில கவிதைகள் படித்திருக்கிறேன்.
சாம்பல் சிற்றிதழில் சூத்ரதாரி எழுதிய கட்டுரை ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
நகுலனின் வீட்டுப் புத்தகங்களைக் கரையான்கள் வாசிக்கின்றன. – சூத்ரதாரி – சாம்பல் சிற்றிதழ் (ஜனவரி – பிப்ரவரி – 2004)
கடந்த டிசம்பர் 6 அன்று திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தில் பெரும்பாலும் தமிழ்த்துறை மாணவர்களை மட்டுமே பார்வையாளர்களாகக் கொண்டு நிகழ்ந்த நகுலன் கருத்தரங்கிற்கு நகுலனை கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தார்கள். கனிந்த நகுலன் திரும்ப குழந்தைப் பருவமெய்திய தோற்றத்திலிருந்தார் . கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கூட்டத்தில் இருந்தார். நிகழ்வுகளை உள்வாங்கிக் கொள்கிறாரா இல்லையா என்பதை அறிய இயலாத அளவிற்கு கனிவான புன்னகை மட்டுமே அவரது முகபாவமாக இருந்தது.வழக்கமான அவரது மூன்றடுக்கு நினைவுகளின் எந்த அடுக்கில் அவர் அங்கே உலவிக் கொண்டிருந்தார் என்பது பார்வையாளர்களால் கண்டு கொள்ள இயலாததாகவே இருந்தது. அவருக்கான ப.சிங்காரம் நினைவுப்பரிசை வாங்கிக் கொள்ள அந்தச் சிறுமேடையில் அவர் விருப்பப்படி ஏற்றுவிக்கப்பட்டார். கருத்தரங்கின் முடிவில் அழைத்துச் செல்லப்படுகையில் அந்நிகழ்வை அவர் உணர்ந்திருக்கவில்லை என்பதில் யாருக்கும் உள்ளூர ஐயமிருந்துருக்கவில்லை.
அதன் தொடர் நிகழ்வாக அன்று மாலை நாஞ்சில்நாடன், கி.அ.சச்சிதானந்தன். எம்.எஸ்.ஜெயமோகன் , வேதசகாயகுமார் , ஞானசேகரன் , நெய்தல் கிருஷ்ணன் , சூத்ரதாரி ஆகியோர் நகுலனை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள்.
“இதான் அவரோட பர்ணசாலை” என்று நாஞ்சில்நாடன் காட்டிய இடத்தில் பசிய இலைப்பரப்பு மூடிய ஒரு சரிவுதான் தென்பட்டது.ஒழுங்கற்ற மண்பாதையில் தலைமுட்டும் கிளைகளை விலக்கிக் கொண்டு இறங்கினால் அந்த வீடு கண்ணில் தென்படுகிறது . நிறைய மரங்கள் செடி கொடிகளுடன் ரம்மியமான தோட்டம் . ” பரவாயில்லையே தோட்டம் சுத்தமா இருக்கு ” நாஞ்சில்நாடன் படிகளில் ஏறுகிறார். வருபவர்களைக் கூர்ந்து பார்த்தபடி நகுலன் நின்றிருக்கிறார். இரட்டைத்தூண்கள் தாங்கிய முற்றத்தின் கீழ் அவரது நெடிசலான உருவம் மேலும் குறுகித் தெரிந்தது . “நீங்க யாரு ? ” நாஞ்சில் நாடனைக் கேட்கிறார். மறுபடி அவர் தன்னை சொல்லிக்கொண்டதும் ” ஆமா … வர்றேன்னு சொன்னிங்கல்ல ” என்று சிரித்துவிட்டு மற்றவர்களையும் பார்க்கிறார். . கி.அ.சச்சிதானந்தனை அறிமுகப்படுத்தும் போது ” யாரு கேரளக்கவியா ? ” என்கிறார் . அதே கண்ணாடி எப்போதும் சிரிப்புடனுமான முகம். வீட்டின் சுவர்களும் கூரையும் இருள் உலாவும் அறைகளும் பெரும்காலத்தின் மங்கிய புகைச்சுவடுகளைத் தாங்கியிருக்க , தன் கட்டிலில் அவர் மடங்கி உட்கார்ந்திருக்கிறார் . எல்லோரையும் கவனமாகப் பார்க்கிறார்.சிரிக்கிறார். உடன் வந்திருந்த நெய்தல் கிருஷ்ணனிடம் , ” தப்பா நினைச்சுக்கப்படாது , ஒண்ணு கேட்கலாமா ? ” என்று கேட்டவர் , ” உங்க உடம்பு ஏன் இப்படி இருக்கு ? ” என்கிறார் . ” சின்ன வயசுலேர்ந்தா ? ” என்று மறுபடி கேட்டுவிட்டு பிறகு தலைகவிழ்ந்து மெளனமாக உட்கார்ந்து கொண்டார் . திடீரென்று எதுவோ நினைவில் வந்தது போல் நாஞ்சில் நாடனைப் பார்த்து ” அப்ப நான் சொன்னேனில்லையா , அது..” என்று கட்டைவிரலை குடிப்பதுபோல் காட்டிவிட்டு சிரித்தார். குழந்தைகளின் சிரிப்பில் கனிகிற உற்சாகத்துடன் அவர் கேட்டதும் ” வருது … நண்பர்கள் வாங்கிட்டு வாராங்க ” என்றதும் , மறுப்பது போல் கையை ஆட்டிக்கொண்டே ” சும்மா கேட்டேன் ” என்று தலையாட்டிக் கொண்டார்.
இப்பொழுதெல்லாம் மது அருந்துவதை அனுமதிப்பதில்லை என்று பொருத்தே சொல்கிறார் . இரவில் சிலநாட்களில் பயங்கரமாய் அவஸ்தைப்படும் போது கண்ணில் பார்க்கவே முடியவில்லை . எதுவும் அவசரமென்றால் அந்த ராத்திரியில் யாரையாவது போய் அழைத்துக்கொண்டு வருவது பெரும் சிரமமாய் போய்விடுகிறது . நண்பர்கள் வந்தால் வாங்கிக்கொண்டு வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறோம் . என்று அவர் சொல்லுவதை கவனிக்கிற மாதிரியிருந்தவர் , நாஞ்சில்நாடனிடம் குடும்பவிஷயங்களை வெகு அக்கறையாகக் கேட்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இதய நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டது பற்றி சொல்லிய பின் ” ஏன் அப்படி வந்துச்சு ? ” என்று கேட்டார். ” நான் குடிக்கிறேன்ல ” நாஞ்சில் உரத்து பதில் சொன்னார் . ” நீங்க குடிக்கிறேளா ? ” சத்தமாய் சிரித்தார். உடனடியாய் நினைவில் வந்தது போல ” நா கேட்டது வருதோல்லியோ ? ” என்றார்.அதே சிரிப்பும் கனிவுமிருந்தது.
ஜெயமோகனையே உற்றுப் பார்த்திருந்துவிட்டு ” உங்கள நான் எங்கயோ பாத்தா மாதிரியிருக்கு ” என்று ஞாபகங்களைத் துழாபுவர் போல தலை கவிழ்ந்துகொண்டார் . அவரது படுக்கையறையில் போர்ஹேவின் “Labyrinth” பிரதியொன்று கிடக்கிறது . ” அப்பப்ப கொஞ்சம் படிக்கிறேன் ” என்றார்.நெய்தல் கிருஷ்ணனின் உடல்வாகை உற்றிருந்தவராய் மீண்டும் காரணம் கேட்டார் . “சின்ன வயசுலேர்ந்து இப்படியா ” என்று வியப்புடன் சிரித்தார் . “இன்னிக்கு இந்த மீட்டிங்க்ல ஒருத்தர் கூட யோசிக்கறா மாதிரியே பேசல” என்று நாஞ்சில்நாடனிடம் சொன்னார். ” காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் கிட்ட அப்படித்தான் பேசியாகணும் ” நாஞ்சில் நாடன் பதில் சொன்னதை ஏற்றுக் கொள்ளாத தொனியில் ” இருந்தாலும் ஏதாவது விஷயம் இருக்கணும் ” என்றார்.
சச்சிதானந்ததையே கூர்ந்து பார்த்தவர் ” எதுக்கு இந்தப் பரிசெல்லாம் தர்றீங்க ? ” என்று மீண்டும் கேட்டார் . அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாதவாராய் தயங்கிய சச்சி ” நீங்க ஏன் எழுதுனீங்க ? ” என்றார். அந்தக் கேள்வியை வாங்கிக் கொண்டவராய் தலை கவிழ்ந்து கொண்டார்.தனது சகோதரி மகன் தன்னை குடிப்பது குறித்து கேள்வி கேட்டதை ஆற்றாமையுடன் சொன்னார் . ” இன்னும் குடிக்கறேளா – அதிகாரம் வந்துச்சுன்னா அப்படி கேக்கறான் ” அவர் யார் என்று கேட்கும் போது அவரால் பெயரை நினைவிலிருந்து சொல்லமுடியாமல் போனது.உறவினர்கள் குறித்து நிதானமாய் யோசித்து தகவல்களை சொன்னார்.” யாராச்சும் கேட்டா நான் இவளத்தான் சொல்லச் சொல்வேன் ” . பொருத்தேயை கை காட்டினார்.
” நீங்க ஏன் குண்டா இருக்கேள் ? ” நெய்தல் கிருஷ்ணனிடம் சிரித்துக் கொண்டே தன் கேள்வியைப் புதுப்பித்துக் கொண்டார் .ஹெமிங்வேயின் கடவுளும் கிழவனும் நாவலை எம்.எஸ் மொழிபெயர்த்திருப்பது பற்றி சொன்னதும் ஹெமிங்வேயைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தவராய் ” அவரோட இன்னொரு நாவல் ரொம்ப நல்ல நாவல் ” என்றார் .FOR WHOM THE BELL TOLLS என்று நினைவுறுத்தியதும் , ” ஆமா… அதான் .. அந்தப் பேரே பாருங்களேன் For whom the bell tolls .. நல்லா இருக்குல்லே ” என்று அந்த வரிகளை சொல்லிப் பார்த்துக் கொண்டார்.
மூன்று அடுக்குகளில் தாவித் தாவிப் பயணித்தபடி இருந்த அவரது இருப்பின் முன்னால் தாளமாட்டாதவைகள் போல் புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன . கரையான்கள் அரித்துவிட்ட பக்கங்களுடன் சாய்ந்து நிற்கும் மர அலமாரிகளிலும் , பெஞ்சுகளிலும் குவிந்துள்ள புத்தகங்களைக் கையால் தொடுவதற்கே பயமாயிருந்தது.
புத்தகங்கள் நிறைய குறைந்துவிட்டதென சொன்ன நாஞ்சில்நாடன் இப்போதும் கூட அவர் புத்தகத்தை யாருக்கும் சுலபத்தில் தந்துவிடாத தன்மையுடனே இருக்கிறார் என்று சொன்னார்.
“மணியைத் தெரியுமா உங்களுக்கு ? ” நாஞ்சிலிடம் கேட்டார் . “உங்க தம்பிதானே , பெங்களூர்ல இருக்குறதா சொன்னீங்களே ” அவர்தான் என்பது போல் தலையசைத்தவர் , வழக்கமான இடவெளிக்குப் பிறகு ” அவரிட்ட பேசமுடியுமா நீங்க ? ” என்று கேட்டார் . ” போன் நம்பர் குடுங்க நான் பேசுறேன் ” நாஞ்சில்நாடன் உத்தரவாதமாய்ச் சொல்லிவிட்டு ” ஏன் நீங்க எதும் எழுதுறதில்லையா ? ” என்று கேட்க முடிவதில்லை என்ற இயலாமையுடன் கைவிரித்தார்.எழுத்துகளைத் தொலைத்துவிட்ட அந்த நரைழுத்த கைகளின் நடுக்கத்தை பொருள்படுத்தாமல் இருக்க முடியவில்லை. ” ஏதும் சமாச்சாரம் சொல்லணுமா அவரிட்ட ? ” நாஞ்சிலின் கேள்விக்கு வெகுநேரம் எடுத்துக் கொண்டார் . மெளனமும் தடுமாற்றமுமாய் தலைகவிழ்த்தவர் மெதுவாகச் சொன்னார்.
” பாத்தா தேவலை ” கட்டாயம் மணியிடம் பேசுவதாய் நாஞ்சில் தொலைபேசி எண்ணைக் கேட்க , மெதுவாக எழுந்தார். தரையில் பாதங்கள் உராய மெல்ல நடந்தவர் வலது பக்க அறைக்குள் போனார்.மஞ்சள் விளக்கொளியில் புத்தகங்கள் கிடக்க குறுக்கும் நெடுக்குமாய் இருமுறை நடந்தார். அறைக்குள் எட்டிப்பார்த்த நண்பரைப் பார்த்து சிரித்துவிட்டு ” இங்கு தான் இருக்கும் ” என்று புத்தக அடுக்குகளில் துழாவினார். சிறிது நேரத்துக்குப்பின் ரப்பர்பேண்ட் போட்டு கிறுக்கப்பட்ட டயரி ஒன்றை எடுத்துப் பிரித்தார்.காகிதங்களும் கடிதங்களுமாய்ப் புடைத்திருந்த டயரியை நிதானமாகத் தேடியவர் அந்த எண்ணைக் கண்டு நாஞ்சிலிடம் சொன்னார்.
கரையான் அரித்த புத்தகங்களுக்கு நடுவில் மங்கிய விளக்கொளியில் நின்றிருந்த அந்த உருவமும் , அவரது சிரிப்பும் காலத்தின் அவசரத்தை கேலி செய்வது போலிருந்தது.
விடைபெற்றுக் கொண்டு படியிறங்குகையில் , தோட்டத்தின் இருளினூடே இலைகளின் சலசலப்பு , லேசான குளிர் , எதையும் அறியாத உறைதன்மையுடன் வீற்றிருந்த வீட்டினுள் நகுலனின் தளர்ந்த உருவம் எங்களையே பார்த்துக்கொண்டு நிற்கிறது – அவரது எழுத்துக்களைப் போல !
Dear Ganesh,
Thanks for this post. share more like this.
– Suresh Kannan
Comment by suresh kannan — September 2, 2007 @ 12:44 pm |