நகுலனுக்கு உடல்நலம் சரியில்லை என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன . ஒரு குறிப்பிட்ட செய்தியில் ” நான் இறந்த பிறகு எனக்கு கூட்டம் நடத்த வேண்டாம். ஏனென்றால் என்னால் அந்தக்கூட்டத்துக்கு வர முடியாது “ என்று நகுலன் சொல்லியிருந்ததாக ஒரு குறிப்பு இருந்தது. நகுலன் மீது மிகுந்த அபிபானம் இருந்தும் அவரைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்த எனக்கு அப்படி ஏதாவது நடந்துவிடுமோ என்கிற பயம் ஏற்பட்டது. அவரை சீக்கிரம் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்புப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.நான் அப்போது சூரத்தில் இருந்தேன் . அப்போது தான் அவருடைய ரோகிகள் நாவலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் படித்துக் கொண்டிருந்தேன் . அந்த சந்தர்ப்பத்தில் நோயாளிகளின் உலகம் பற்றிய அந்த நாவலின் ஒவ்வொரு வரியும் விசேஷ அர்த்தங்கள் கொண்டு மனதை அலைக்கழிக்க ஆரம்பித்தன . நகுலன் எப்போதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே அவருடைய கலையின் வசீகரம் என்பதாகவே அவரைப் பற்றி என் மனதில் பதிவாகி இருந்தது. ரோகிகள் நாவல் அதை மெய்ப்பித்துக் கொண்டிருந்தது. வலி , வேதனை, வாழ்க்கை பற்றிய பயம் , மனிதர்களின் மீது வெறுப்பு தூக்கமின்மை ஆகியவற்றால் சூழப்பட்ட நோயாளிகளின் நடுவே தன்னையும் ஒருவனாக இருத்திக்கொண்டு உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் சலனமின்றி எல்லாவற்றையும் இயல்பாகப் பார்க்கக்கூடிய ஒரு பார்வையை நகுலன் அந்த நாவலில் வெளிப்படுத்தி இருந்தார். வாழ்க்கை மனித உடலை சார்ந்திருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மை மனச்சுமைகளை கொஞ்சம் தொலைவில் நிறுத்த முடியும் என்கிற பாவனை நாவலில் வெளிப்பட்டது. வாழ்க்கையின் சிறுசிறு அசைவுகள் குறித்தும் இலக்கிய மொழி குறித்தும் நகுலனின் கவனம் ஒரு ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தியது . எளிமையும் , புதிர்த்தன்மையும் கொண்டு தமிழ்ச்சூழலின் ஆர்ப்பாட்டமான அங்கீகரிப்புக்கு அப்பாற்பட்டவராக வசீகரமும் ஈர்ப்பும் கொண்ட ஒரு நகுலனின் சித்திரம் தொடர்ந்து மனதை வருத்திக் கொண்டிருந்தது.
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது ?
என்ற அவருடைய கவிதை வரிகள் ஒரு தனிமையின்
பிரம்மாண்டத்தை ஒலித்தபடி இருந்தன .
திடீரென்று அமெரிக்க தமிழ் இலக்கிய நிறுவனமான விளக்கில் இருந்து சென்ற ஆண்டுக்கான பரிசுக்குரியவரை தெரிவு செய்ய ஒத்துழைக்கும்படி தகவல் வந்தது . ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்பு செய்த ஒரு படைப்பிலக்கியவாதிக்கு ரூ 25000 பரிசு வழங்கி கெளரவிக்கும் அமைப்பு அது . இங்கிருந்து சென்ற கோ.ராஜாராம் , நா.கோபால்சாமி மற்றும் சில தமிழ்
ஆர்வலர்களைக் கொண்ட ஒரு சிறு நண்பர்கள் குழு அது .
சென்ற முறை கோவை ஞானிக்கு பரிசளித்த பிறகு பரிசளிப்புகள் தொடருமா , தொடராதா என்கிற நிச்சயமற்ற தன்மையில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தது . ஏற்கனவே திண்ணை.காம் என்கிற இணைய தளத்தில் தமிழ் படைப்பிலக்கிய முயற்சிகளைப் பரவலாக அறிமுகப்படுத்தும் பணியில் கோ.ராஜாராம் ஈடுபட்டிருந்தார். அவரையும் என்னையும் தவிர தேர்வுக்குழுவில் இருந்த மற்றொருவர் கவிஞர் இன்குலாப்.ஏற்கனவே சி.சு.செல்லப்பா , பிரமிள் , கோவை ஞானி ஆகியோரை தேர்ந்தெடுத்ததின் மூலம் நிறுவனங்களின் பின்புலமின்றி தன்னுடைய இலக்கிய நம்பிக்கைக்களுக்காக சமரசமின்றிப்
பாடுபடும் தனிமனித உழைப்பை கெளரவிப்பதை விளக்கு ஒரு மரபாகக் கொண்டிருந்தது. இவர்கள் பரிசளிக்கும் நம்முடைய அரசு நிறுவனங்களின் பார்வையிலிருந்தும் , விதிமுறைகளிலிருந்தும் தப்பிவிடக்கூடியவர்கள் . இவர்கள் பரிசுக்காக காத்திருப்பவர்களும் அல்ல . புறக்கணிப்பும் அதிகார வழிபாடும் நிறைந்த சூழல் நம்முடையது . உண்மையான இலக்கியவாதிகளை இலக்கியம் சார்ந்த அமைப்புகள் தானே கெளரவிக்க இயலும் ?
நகுலனுக்கு இயல்பாக சேரவேண்டிய ஒரு விருதுடன்
அவரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக எனக்குத் தோன்றியது. எழுத்தாளர் கோ.ராஜாராமிற்கு நகுலனுடைய தேர்வில் மறுப்பு இருக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது . ஆனால் கவிஞர் இன்குலாப் மாறுபட்ட நிலைப்பாடுகள் கொண்டவர் . நகுலனுடைய தேர்வு அவருக்கு உவப்பானதாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது . ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக பிரபஞ்ச உறவுகள் குறித்தும் வாழ்க்கையின் இருண்மை குறித்தும் தீவிரமான அக்கறையுடன் செயல்பட்ட ஒரு இலக்கியவாதி கெளரவிக்கப்படுவது அவசியம் என்ற எங்கள் நிலைப்பாடைத் தன்னுடைய கருத்து முரண்பாடுகளுக்கிடையிலும் இன்குலாப் மிகவும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.கருத்து மோதல்கள் ஒரு செறிவான தளத்தில் வெளிப்பட இயலாத சூழல் நம்முடையது .வியாபாரத்தனமும் அதிகார வழிபாடும் நம்முடைய எதிரிகளாக இருந்த சூழல் மாறி முத்துச்சாமியின் பாகப்பிரிவினை நாடகம் போல பூனைகள் அடித்துக்கொண்டு குரங்கிடம் அப்பம் கொடுத்த கதை நம்முடையது. இத்தகைய சூழலில் ஒரு எளிய , தீவிர இலக்கியவாதிக்காக முரண்பட்ட நிலையிலும் இன்குலாப் வெளிப்படுத்திய கருத்து நாகரீகமும் பண்பாடும் மதிக்கப்படவேண்டியவை என்று கருதுகிறேன்.
கலைஞனின் மனம் என்பது ஒரே சமயத்தில் அங்கீகாரத்தை வேண்டுவதாகவும் அதே சமயம் அங்கீகாரத்தின் கவனம் கண்டு பின்னடைவதாகவுமே இருந்திருக்கிறது. விருதுக்கான செய்தியுடன் நான் நகுலனை திருவனந்தபுரத்தில் சந்தித்தபோது அவரிடமிருந்து வெளிப்பட்ட எதிர்வினை ” என்னை எப்படியாவது இந்த சிக்கலில் இருந்து விடுவியுங்களேன் ” என்பதுதான் . அவருடைய நினைவுத்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் எழுதப்பட்ட பயங்களுக்கு நடுவே 25 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சில கவிதைகளை நினைவு கூர்ந்து குழந்தையைப் போல அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
தனியாக இருக்கத்
தெரியாத – இயலாத
ஒருவனும்
ஒரு எழுத்தாளனாக
இருக்க முடியாது
என்ற அவரது வரிகள் அவரது வீடு , முற்றம் எங்கும்
நிரம்பி வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன . ஒரு வழியாக அவருடைய சம்மதத்தைப் பெற்று விருது நிகழ்ச்சிக்காக அவரை அழைக்கவந்த போது வெண்ணிற உடையில் முகமலர்ச்சியுடன் அவர் எங்களை
எதிர்கொண்ட காட்சி நோயின் அடையாளங்கள் நீங்கிய ஒரு புது நகுலனைப் பார்ப்பது போல் இருந்தது.
பின்குறிப்பு :
மேற்காணும் கட்டுரை காலச்சுவடு இதழ் 34 ல்(மார்ச் – ஏப்ரல் 2001) வெளியானதாகும்.
Leave a Reply