சென்னை நியூ உட்லாண்ட்ஸ் ஓட்டலில் (06/01/08 ஞாயிறு) அன்று சாருநிவேதிதா எழுதிய 3 புத்தகங்கள் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்டன.
இந்நிகழ்விற்கு நண்பர் சேவியருடன் சென்றிருந்தேன் . மூன்று புத்தகங்களுள் ஒரு புத்தகம் சினிமாத் துறையைச் சார்ந்ததாக இருந்ததால் மேடையில் திரைத்துறை சார்ந்த பலர் அமர்ந்திருந்தனர்
பார்வையாளர்கள் கூட்டத்தில் தெரிந்த முகங்கள் , வலைப்பதிவாளர்கள் யாரேனும் வந்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்த பொழுது லிவிங்ஸ்மைல் வித்யாவும் அவரது நண்பர்கள் சிலரும் இருப்பதைக் காண முடிந்தது.
இனி புத்தகவெளியீட்டு விழாவில் நான் கேட்டவற்றிலிருந்து சில வரிகள் ….
வசந்தபாலன்
வெயில் திரைப்பட இயக்குநர் வசந்த பாலன் அவர்கள் , தனது உதவி இயக்குநர்களிடம் தான் ஏற்கனவே சிலாகித்துப்
பேசியிருக்கும் சில திரைப்படக் காட்சியமைப்புகளை சாருநிவேதிதா தனது புத்தகத்திலும் எழுதியிருப்பதாகப் பேசினார்.மேலும் திரைத்துறையைப் பற்றிய நுட்பமான பார்வையைக் கொண்டிருக்கும் சாரு, திரைத்துறைக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
பாலாஜி சக்திவேல்
காதல் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் , தான் பேச இருந்த அனைத்தையும் வசந்த பாலன் பேசிவிட்டுச் சென்று விட்டதாகக் கூறி விட்டுப் பேச ஆரம்பித்தார்.வசந்த பாலனுக்கு சிற்றிதழ்கள் படிக்கும் பழக்கம் உண்டு , அவர் நிறைய கவிதைகள் கூட எழுதியிருக்கிறார். அவர் அளவிற்கு எனக்கு இலக்கியத்தில் பரிச்சயம் கிடையாது . சாருவின் புத்தகத்தைப் படித்த பொழுது சினிமாவைப் பற்றி சாரு நிறைய தெரிந்து வைத்திருக்கிறார் என்றும் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக கூறுகிறார் என்றும் குறிப்பிட்டார்.பாலு மகேந்திராவை தங்களது ஆசான் என்று பாலாஜி சக்திவேல் குறிப்பிட்டார்.
குமார்
மூன்றாவதாகப் பேசியவருடைய பெயர் குமார் என்று கேள்விப்பட்டேன்.தவறாக இருக்கலாம். சாருநிவேதிதாவின் கோணல்பக்கங்கள் சிலவற்றைப் படித்திருப்பதாகக் கூறிய இவர் , ” சாருநிவேதிதா ஒரு கட்டுரையில், தான் புத்தகம் படிக்கும் பொழுது கையில் ஒரு பென்சிலை வைத்துக் கொண்டு மிகவும் பிடித்த வரிகளைக் கோடிட்டு வைத்துக் கொள்வதாக எழுதியிருக்கிறார்,இதே பழக்கம் எனக்கும் உண்டு, ஆனால் சாருநிவேநிதாவின் புத்தகத்தைப் படிக்கும் பொழுது ஒரு பேனாவும் வைத்துக் கொள்ளவேண்டும், ஏனென்றால் அவர் நிறைய புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.அந்தப் புத்தங்களின் பெயர்களை எல்லாம் எழுதிவைத்துக் கொள்ள ஒரு பேனாவும் வேண்டும் ” என்று கூறினார் . அதுசமயம் ஜோதிர்மயி சாருவை
நோக்கி பெருமிதமாகப் புன்னகைத்தார். மேலும் சாரு தனது கட்டுரைகளில் மேல்நாட்டு எழுத்தாளர்கள் பலரைப் பற்றி எழுதியிருந்தாலும் அவர்களுள் பெரும்பாலானோர் வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்தவர்கள் மற்றும் கலகக்காரர்கள் என்று கூறினார்,சாரு ஒரு கலகக்காரர், தமிழகமே கொண்டாடும் ஜெயகாந்தனையும் சுராவையும் கேள்விக்குட்படுத்தியவர், என்று குமார் பேசிய பொழுது அரங்கத்தில் கரவொலி மிகுந்தது.குறைவாகப் பேசினாலும் மிகவும் நிறைவாகப் பேசினார் குமார்.
அழகிய பெரியவன்
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சாரு தனது புத்தகங்களை அனுப்பி புத்தகவிழாவில் பேச அழைத்ததாகவும், சுமார் ஒன்றரை நாட்களில் ஓரளவிற்கு மூன்று புத்தகங்களையும்
படித்துவிட்டதாகவும் கூறிய அழகிய பெரியவன், சாரு தனது கருத்துக்களைக் காத்திரமாகக் கூறுபவர்,ஆனாலும் எழுத்தில் நல்ல sattire இருக்கும் என்றும் கூறினார்.
கோபி கிருஷ்ணனைப் பற்றிய சாருவின் கட்டுரையைப் படித்த
பொழுது தான் மிகவும் நெகிழ்ந்து விட்டதாகக் கூறிய அழகிய பெரியவன்
இலக்கியவாதிகள் உயிரோடிருக்கும் வரை உலை வைக்கும் சமூகம் , இறந்தபிறகு அவர்களுக்கு ஏன் சிலை வைக்கிறது என்று உணர்ச்சிமேலிடப் பேசினார்.
அழகிய பெரியவன் , புதுமைப்பித்தன் மீது தான் மிகுந்த அபிமானம் வைத்திருந்ததாகவும் , ஆனால் சாருவின் புதுமைப் பித்தன் குறித்தான கட்டுரை ஒன்றைப் படித்த பிறகு புதுமைப்பித்தனின் மீதான அபிமானம் குறைந்துவிட்டதாகவும் கூறினார்.புதுமைப்பித்தன் நலிவடைந்தவர்களைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் ?தலித்துக்களைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் ?என்று சாரு அந்தக் கட்டுரையில் கேட்பதில் நியாயம் இருப்பதாகவும் கூறினார்.சாரு தனது எழுத்துக்களில் நிறைய கவிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டி எழுதுவார் என்று கூறிய அழகியபெரியவன் ,
கனவுகளைப் பற்றி எப்படிப் பாட முடியும்
எங்கள் தெருவில் ரத்த ஆறு ஓடும் பொழுது
என்ற கவிதை வரிகளைக் கூறினார்
பாலு மகேந்திரா
மூன்றாம்பிறை திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா , சாருவின் எழுத்துக்களை ஏற்கனவே படித்திருப்பதாகவும் , ஆனால் அன்று தான் (06/01/2008 ) முதன் முறையாக நேரில் சந்திப்பதாகவும் கூறினார்.
பாரதி(இயக்குநர் பாரதிராஜா)யும் தானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றும் ,1976 இல் ஒரே நேரத்தில் கமலை நாயகனாக வைத்து இருவரும் தனித்தனியே வெவ்வேறு படங்களை கர்நாடகாவில் இயக்கியதாகவும் பாலுமகேந்திரா கூறினார்.
பாரதிராஜாவைப் போல் சாருவும் தனது இதயத்திற்கு நெருக்கமாகிவிட்டதாகக் கூறினார். பாரதி , ஒரு outspoken person , அதே போல் சாருவும் தனது எழுத்துக்களில் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதாக பாலு குறிப்பிட்டார்.
நாள் முழுதும் உழைத்த ஒருவன் சாயங்காலம் சாராயக்கடைக்குச் செல்வதைப் போல படித்துப் படித்து ஏற்படும் மூளைச்சோர்வுக்குப் பின்னாலே தான் சினிமாவிற்குப் போவதாக சாரு எழுதியிருப்பதை , பாலு இரண்டு முறை படித்துக் காட்டினார்.
தனது பால்யத்தைப் பற்றி பாலு பேச ஆரம்பித்தார்.தனக்கு 15 வயதிலேயே சினிமா மோகம்
வந்துவிட்டதாகவும் இன்றளவும் அது இம்மியளவும் குறையாமல் இருப்பதாகவும் கூறினார் .சிறிய வயதிலேயே சினிமா சார்ந்த ஒரு சிற்றிதழை ஆரம்பித்தாகவும் அதில் மிகவும் காரசாரமாக எழுதிய பொழுது அவருடைய தந்தை ஏன் இந்த கோபம் ? என்று கேட்டதற்கு , எனது கோபத்தை எழுத்துக்களில் காட்டுகிறேன் என்று பதிலளித்ததாகவும் அதற்கு அவருடைய தந்தை அது கோபம் அல்ல உன் இருப்பைக் காட்டுகிற வெறி என்று கூறியது உண்மை என்று உணர்ந்ததாகவும் கூறினார்.
கருத்தம்மா, என் உயிர்த்தோழன் போன்ற படங்களை பாடல்களே இல்லாத படங்களாக இயக்கியிருந்தால் பாரதிராஜாவும் அரவிந்தனைப் போல் , அடூரைப் போல் பேசப்பட்டிருப்பார் என்று சாரு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதைப் படித்த பொழுது தன்னுடைய படங்களைப் பற்றி சாரு எங்காவது பிரஸ்தாபித்திருப்பார் என்று எண்ணி தான் ஏமாந்ததாதாகவும், பாடல்களே இல்லாமல் வீடு , சந்தியா ராகம் ஆகிய படங்களை இயக்கிருந்தாலும் தானும் பேசப்படவில்லை என்று கூறிவிட்டு …. ஏன் சாரு என் படங்களை நீங்கள் பார்க்கவில்லையா என்று பாலு கேள்வியெழுப்பினார்.
பாலாஜி சக்திவேலின் காதல் படத்தின் நூறாவது நாளில், ” பாலாஜியை நினைத்து எனக்கு இப்பொழுதே பயமாக இருக்கிறது , அடுத்த படத்தில் , இந்த காதல் படத்தை விட
வேறு என்ன உசத்தியாக செய்துவிடுவார் என்ற பிரமிப்பு இருக்கிறது ” என்று தான் பேசியதாகவும் அவருடைய கல்லூரி படத்தைப் பார்த்த பிறகும் அதே பிரமிப்பு தொடருவதாகவும் பேசினார் பாலு.கல்லூரி திரைப்படத்தில் நடித்தவர்கள் பலர் கரிய நிறம் உடையவர்களாகவும் அந்த திராவிட முகங்களைத் திரையில் கண்ட பொழுது தான் மகிழ்ந்ததாகவும் கூறிய பாலு தனது படத்திலும் பெரும்பாலும் கருப்பு நிறப் பெண்களையே நாயகியாக நடிக்க வைத்ததாகவும் கூறினார்
I like Black girls , Yes I like Black girls
பாலு தனது உரையின் நடுவே உணர்ச்சி மேலிடும் போதெல்லாம் ஆங்கிலம் கலந்து பேசினார்.
இறுதியாக ” சாரு , கண்டிப்பாக ஒரு திரைப்படமாவது இயக்கவேண்டும் குறைந்த பட்சம் ஒரு டாக்குமெண்டரி படமாவது எடுக்க வேண்டும் ” என்று கூறியது வேண்டுகோளைப் போல் அல்லாமல் சவால் இடுவது போல் இருந்தது
எஸ்.ராமகிருஷ்ணன்
மிகவும் கம்பீரமான குரலில் பேசிய எஸ்.ரா,தனது எழுத்துக்களை தமிழ் இலக்கிய உலகில் மிகவும் விமர்சித்தவர் சாரு , தனது எழுத்துக்களை தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பாராட்டியவரும் சாரு தான் , நானும் சாருவும் பலவிடயங்களில் எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் 20 ஆண்டு காலமாக நண்பர்களாக இருக்கிறோம் ” என்று எஸ்.ரா பேசினார்.சாருவுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் , தனக்கு பிடிக்காதென்றும் தனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் , சாருவுக்கு பிடிக்காதென்றும் பேசினார்.
மேடையில் வீற்றிருந்த நல்லிசெட்டி அவர்கள் புன்னகை பூத்தபடி அமர்ந்திருந்தார்.
மேடையில் ஓரத்தில் அமர்ந்திருந்த மனுஷ்யபுத்திரன் அவர்கள் நிகழ்வு முழுக்க ஏனோ ஏதோ சிந்தனையில் இருந்துகொண்டிந்தார்
நேரமாகிவிட்டதால் நானும் சேவியரும் வீட்டிற்குத் திரும்பிவிட்டோம்.